மீன்பிடி படகில் கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த இலங்கையர்கள் கேரளாவில் கைது
கேரளாவிலுள்ள கொல்லம் என்ற இடத்தில், ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த 11 இலங்கையர்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
விசாரணையில், அவர்கள் மீன்பிடி படகு ஒன்றின் உதவியுடன் கனடா செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் இருவர் சுற்றுலா விசா மூலம் தமிழ்நாட்டை வந்தடைந்த நிலையில் மாயமாகியுள்ளார்கள். மற்ற ஒன்பதுபேர், அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்து ராமநாதபுரத்திலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்கள்.
சுற்றுலா விசாவில் வந்தவர்களின் மொபைல் சிக்னல் மூலம் அவர்கள் கொல்லம் என்ற இடத்தில் இருப்பது தெரியவந்த நிலையில், கேரள பொலிசாருக்கு தகவல் அனுப்பப்பட, அவர்கள் ஹொட்டல் ஒன்றை சோதனையிடும்போது அங்கு 11 இலங்கையர்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையின்போது, தாங்கள் கொழும்புவிலுள்ள Lakhmana என்னும் ஏஜண்டுக்கு ஆளுக்கு 2.5 இலட்ச ரூபாய் கொடுத்ததாகவும், மீன்பிடி படகில் அவர்களை கனடாவுக்கு அனுப்ப அவர் உறுதியளித்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.