தெருநாய் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த 11 வயது சிறுவன்!
கேரள மாநிலத்தில் தெருநாய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, கண்ணூர் முழப்பிலங்காட்லைச் சேர்ந்த நௌஷாத் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் நிஹால் (11). இவர் மாற்றுதிறனாளி.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டு வாசலில் நிஹால் விளையாடிக்கொண்டிருந்த வெகுநேரம் ஆகியும் நிஹால் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.
இருப்பினும், நிஹால் வீட்டு வாசலில் இல்லை. இதனையடுத்து, நிஹாலை உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். இரவு 8.30 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் தெருநாய்களால் குதறப்பட்டு, உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிஹால் மூச்சற்ற நிலையில், மயங்கி கிடந்துள்ளார்.
மேலும் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நிஹாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், தெருநாய்கள் தாக்குதலில் நிஹால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தெருநாய் தாக்குதலுக்கு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கேரளாவில் கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.