பேபி பாட்டிலுடன் வலம் வந்த 37 வயதுச் சிறுமி! பிரேசிலில் இடம்பெற்ற விநோத சம்பவம்
பிரேசிலின் தெற்கு சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பம், 'கேப்ரியல்' என்ற 12 வயது அனாதைச் சிறுமிக்குத் தங்களது வீட்டில் புகலிடம் அளித்துக் காப்பற்ற முன்வந்தது.
பார்ப்பதற்குச் சற்று வயது முதிர்ந்தவள் போலத் தெரிந்தாலும், அந்தச் சிறுமியின் மழலைத்தனமான பேச்சும், நடத்தைகளும் அந்தக் குடும்பத்தினரின் சந்தேகத்தை அண்டவிடவில்லை.
ஆனால், கடந்த வாரம் அந்தப் பெண்ணைப் பொலிஸார் கைது செய்தபோதுதான், தாங்கள் வளர்த்தது 'குழந்தை அல்ல, 37 வயதுப் பெண்' என்ற அதிர்ச்சி உண்மை அந்தக் குடும்பத்திற்குத் தெரியவந்தது.

பொலிஸாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிற்கு 37 வயது என்பதும், அவர் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி விவகாரங்களில் கைதேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்தக் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, தனக்கு 'ஆட்டிசம்' குறைபாடு மற்றும் சில மருத்துவப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் பொய் கூறியுள்ளார்.
தான் ஒரு சிறுமிதான் என்றும், சிறுவயதில் தனக்குக் கட்டாய ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே தனது உடல் தோற்றம் ஒரு முதிர்ந்த பெண்ணைப் போலக் காணப்படுகிறது என்றும் கூறி அந்தக் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.
தன்னுடைய வேடத்தைக் கலைக்காமல் இருப்பதற்காக, அவர் தினமும் குழந்தைகளைப் போலவே பாசாங்கு செய்துள்ளார்.
எப்போதும் கையில் பொம்மைகளுடன் விளையாடுவது, படுக்கையில் பேபி பாட்டில் மூலம் பால் குடிப்பது மற்றும் வாயில் சூப்புக்கட்டை (Pacifier) மாட்டிக்கொண்டு திரிவது என ஒரு வருடத்திற்கும் மேலாக முழுநேரச் சிறுமியாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
இறுதியில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையின் போது, அந்தப் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் ஜாயின்வில்லே பிராந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் படமான 'Orphan' கதையில் வருவது போலவே, இந்தப் பெண்ணும் பிரேசிலின் பல மாகாணங்களில் வெவ்வேறு பெயர்களில் இதேபோன்ற பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் தன்னை 12 வயது சிறுமி என்றும், தான் பாலியல் கடத்தலில் இருந்து தப்பி வந்ததாகவும் கூறி பலரை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளார்.
சாவ் பாலோவில் இங்கும் இதே சிறுமி வேடமிட்டுப் பல குடும்பங்களை ஏமாற்றியுள்ளார்.
சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினாஸ் ஜெரைஸ் உள்ளிட்ட பல பிரேசிலிய மாநிலங்களில் இவருக்கு எதிராக ஏற்கனவே ஆள்மாறாட்டக் குற்றப் பதிவுகள் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சம் கொடுத்த குடும்பத்தின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி, ஒரு முதிய பெண் ஓராண்டு காலம் குழந்தையாக நடித்த இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.