காசாவில் பைரன் புயல் தாக்கத்தால் 14 பேர் உயிரிழப்பு
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காசாவுக்குள் அவசர உதவிப் பொருட்கள், தங்குமிட வசதிகள் மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.