ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 14 திமிங்கிலங்கள்!
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் (sperm whales) கரை ஒதுங்கி மடிந்துவிட்டன.
அதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் டாஸ்மேனியாவின் வடக்குக் கடற்கரையில் உள்ள கிங் தீவில்(King Island) அந்தத் திமிங்கிலங்கள் மாண்டுகிடக்கக் காணப்பட்டன.
சம்பவத்தை விசாரிக்க, உயிரியலாளர்களும், ஆஸ்திரேலியப் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரும் தீவுக்குச் சென்றுள்ளனர். வான்வழியாகக் கண்காணித்ததில், வேறு திமிங்கிலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இளம் திமிங்கிலங்கள் வழிதவறிச் சென்று மடிந்திருக்கலாம் என வனவிலங்கு உயிரியல்துறை நிபுணர் கிரிஸ் கார்ல்யோன்(Kris Carlyon), உள்ளூர்ப் பத்திரிக்கை Mercury-யிடம் தெரிவித்தார்.
அத்துடன் திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட திமிங்கிலங்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியிருக்கக்கூடும் என்றார் அவர்.