உலகின் வயது முதிர்ந்த ஜனாதிபதி பதவிப் பிரமாணம்
உலகின் மிகவும் வயது முதிர்ந்த ஜனாதிபதியான போல் பியா எட்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தனது எட்டாவது தொடர்ச்சியான பதவிக்காலத்திற்காக பதவியேற்றபோது, தேர்தல் பிந்தைய வன்முறையால் பதற்றமடைந்த நாட்டில் ஒழுங்கை மீட்டெடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.
தனது பதவியேற்பு உரையில், உலகின் மிக வயதான ஆட்சியாளர் என கருதப்படும் பியா, போராட்டங்களில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

கடந்த மாத தேர்தலில் மோசடி
அதே நேரத்தில் “பொறுப்பற்ற அரசியல்வாதிகளே” நாட்டை கலக்கத்துக்குள் தள்ளியதாக குற்றம் சாட்டினார். “நிச்சயமாக ஒழுங்கு நிலைக்கும்,” என அவர் கூறி, நாட்டை மீண்டும் நெருக்கடியில் தள்ளுவது பயனற்றது என வலியுறுத்தினார்.
கடந்த மாத தேர்தலில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், பியா தேர்தல் செயல்முறை திருப்திகரமானது எனவும் தேர்தல் ஆணையமான எலெகம் (Elecam)-ஐ பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி பியா 54% வாக்குகளையும், எதிர்க்கட்சித் தலைவர் இஸா சிரோமா பகாரி (Issa Tchiroma Bakary) 35% வாக்குகளையும் பெற்றுள்ளார்.
எனினும் பகாரி தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி, ஆட்சி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததுடன், 1,200 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் பிற அமைப்புகள் இதைவிட அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக கூறுகின்றன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பியா பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையைப் பாராட்டியபோதும், அதிகப்படியான பலவந்தம் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் கூறவில்லை.
“தேர்தல் இனி கடந்தது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியான, நிலையான, செழிப்பான கேமரூனை உருவாக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும், ஊழல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உறுதியளிப்பதாகவும் கூறினார்.
பால் பியா முதன்முதலில் 1982 நவம்பரில் முன்னாள் ஜனாதிபதி அக்மதூ அகிஜோ (Ahmadou Ahidjo) ராஜினாமை செய்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார். விமர்சகர்கள் அவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கையால் நாட்டை ஆட்சி செய்துவருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.