மனிடோபாவில் 19 மாத தீவிர சோதனை: 15 பேர் மீது வழக்கு!
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
'புராஜெக்ட் டோலர்' எனப் பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் மற்றும் விங்க்ளர் பொலிஸ் பிரிவு இணைந்து மேற்கொண்டன.
இது தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 25, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

கார்மன், விங்க்ளர், வின்னிபெக், மோர்டன் உள்ளிட்ட 10 நகரங்களைச் சேர்ந்த 15 பேர் மீது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடர்பாக மொத்தம் 67 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் கார்மன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது மட்டுமே 29 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் கடந்த பெப்ரவரி மாதம் காரில் கொகைன் மற்றும் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், உள்ளூர் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு பல கிலோகிராம் கொகைன் கடத்தப்பட்டதை விங்க்ளர் பொலிஸார் கண்டறிந்தனர்.
அதன்பின்னரே பொலிஸாரின் உதவியுடன் இந்த பிரம்மாண்ட கூட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
சட்டவிரோத போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் அகற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு அனைத்துக் குழுக்களும் இணைந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.