டிரம்ப் மகன் உயிருக்கு ரூ.95 கோடி பரிசு ; ஈரான் தொடர்புடைய ஊடகம் வெளியிட்ட வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பாரனை எங்கு கொல்லலாம்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், பாரன் டிரம்பின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவரை கொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பாரன் டிரம்ப் கல்வி பயிலும் பல்கலைக்கழகம், அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்புக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ரகசிய சேவை அதிகாரி ஒருவர், பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், பாரன் டிரம்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினரை குறிவைத்து இத்தகைய மிரட்டல் வெளியாகியுள்ளதாக கூறப்படுவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.