கனடாவில் 15 வயது சிறுவனின் முகம் சுழிக்கச் செய்யும் செயல்
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் லெத்பிரிட்ஜ் நகரில் பெண்களை குறிவைத்து இடம்பெற்றதாக கூறப்படும் தகாத செயல்கள் தொடர்பில் 15 வயது சிறுவன் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 16ஆம் திகதி லேக்விவ் டிரைவ் பகுதியில் உள்ள கோல்பேங்க்ஸ் வழியாக 41 வயதுடைய பெண் ஒருவர் நடந்து சென்றபோது பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, குப்பைத் தொட்டிக்குப் பின்னால் மறைந்திருந்த இளைஞரை அந்தப் பெண் அவதானித்துள்ளார்.அவர் அருகில் சென்றபோது, சந்தேகநபர் ஆபாசமான கருத்தொன்றை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் சந்தேகநபரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மேலதிக விசாரணைகளில், ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் முன்னிலையில் ஆபாசச் செயல்களில் ஈடுபட்டதாக பதிவான மேலும் மூன்று சம்பவங்களுடன் சந்தேகநபரின் அடையாளம் ஒத்துப்போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 8 வயது சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது. செப்டெம்பர் 17ஆம் திகதி அதே பகுதியில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவருக்கு பாலியல் தாக்குதல், ஆபாசமாக வெளிப்படுத்துதல் மற்றும் ஆபாசச் செயலில் ஈடுபட்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டோபரில் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.