டோரண்டோ ரிவர்டேல் பகுதியில் இரட்டைக் கொலை: 17 வயது இளைஞர் கைது
டோரண்டோ ரிவர்டேல் பகுதியில் கடந்த மாதம் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 15 அன்று இரவு 11 மணியளவில், பெயின் அவென்யூ மற்றும் லோகன் அவென்யூ பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், இரண்டு ஆண்கள் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் பாதிக்கப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் அங்கு உயிரிழந்தார்.
அந்த நேரத்தில் பலர் பல துப்பாக்கிச் சத்தங்களை கேட்டதாகவும், "வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!" என சில அயலவர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏறக்குறைய ஒரு மாத விசாரணைக்குப் பிறகு, மே 3ஆம் திகதி, 17 வயதான சந்தேகநபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 வயதிற்கு குறைவானவர் என்பதால், அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர்மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
பொலிஸார் மேலும் சந்தேகநபர்களை தேடுகிறார்களா என்பது தற்போது தெளிவாகவில்லை. இது டோரண்டோவில் இந்த ஆண்டில் நடந்த ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொலைச் சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.