காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை காசா நகரில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஒரு கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இறப்பதற்கு சற்று முன்னர், அல்-ஷரீப் என்ற 28 வயதான அல் ஜசீரா செய்தியாளர், அவரது எக்ஸ் தள பக்கத்தில் ”இஸ்ரேல் காசா நகரின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக” பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அல் ஜசீரா ஊடகம் ஒரு அறிக்கையில், இந்தக் கொலைகள் "கருத்துச் சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு பொதுத் தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளது.