ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
கனடாவின் ஹமில்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் Upper James Street மற்றும் Jameston Avenue சந்திப்பு அருகே, Lincoln M. Alexander Parkwayக்கு மேற்கில், அதிகாலை 1:50 மணி அளவில் நடைபெற்றதாக ஹமில்டன் காவல்துறை (Hamilton Police Service – HPS) தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த இரண்டு வயது வந்த ஆண்களை கண்டுள்ளனர்.
அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். காயங்கள் தீவிரமானவை என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லையென போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாவது, சம்பவ இடத்திலிருந்து ஒரு கருப்பு நிற SUV வாகனம் வேகமாக சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது இதுவரை உறுதியாகவில்லை.