நியூஸிலாந்தில் சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த இரண்டு வயது குழந்தை; பேருந்தில் மீட்பு
நியூஸிலாந்தில் பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார்.
இதனையடுத்து சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு விரிவான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.
அந்த குழந்தை சூட்கேஸில் எவ்வளவு நேரம் இருந்தாள், அல்லது பேருந்து எந்த நகரங்களுக்கு இடையே பயணித்தது என்பது குறித்து அதிகாரிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குழந்தையை மோசமாக கையாண்டமை அல்லது புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.