ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் 20,000 மாலுமிகள்!
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில், 20,000 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணையில் மன உளைச்சல், உடல் சோர்வுடன் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் சூழல் உலகளாவிய கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் ஆர்சனியோ டொமிங்குவேஸ் தெரிவித்துள்ளார்.

20,000 மாலுமிகள் 2,000 கப்பல்கள்
சுமார் 20,000 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணைக்குள் சிக்கியிருப்பதுடன், சுமார் 2,000 கப்பல்கள் அங்கிருந்து நகர முடியாமல் முடங்கிக் கிடப்பதாக அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல்கள் நீண்ட காலம் அங்கேயே தங்கியிருப்பதால், மாலுமிகள் கடும் மன உளைச்சலுக்கும் உடல் ரீதியான சோர்வுக்கும் ஆளாகியுள்ளனர். அத்துடன் கப்பல்களைத் தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பும் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல்களுக்கான இழப்புகளைப் பொறுப்பேற்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருவதுடன், பல நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன அல்லது மிக அதிகப்படியான தவணைக் கட்டணங்களை வசூலிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள நாடுகள் வழங்கி வரும் நிவாரண உதவிகளால் ஒரு மனிதாபிமான நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது. கப்பல்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு ஏதுவாக 'மனிதாபிமான வழித்தடம்' ஒன்றை உருவாக்குவதற்கு சர்வதேச கடல்சார் அமைப்பு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இதேவேளை, கப்பல்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய வழித்துணையை வழங்குவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என டொமிங்குவேஸ் விமர்சித்துள்ளார்.
அதேவேளை தொடரும் போர் பதற்றங்களால் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படாது என்பதற்கோ அல்லது அப்பாவி மாலுமிகள் உயிரிழக்க மாட்டார்கள் என்பதற்கோ எந்தவித உத்தரவாதமும் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.