செப்பு கம்பி திருட்டுச் சம்பவம்: சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்
20,000 டொலர் பெறுமதியான செம்பு திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்குச் சற்று முன்னதாக, சான்ட்விச் வீதியின் 3400 ஆவது தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் கூரையிலிருந்த குளிரூட்டித் தொகுதியிலிருந்து சந்தேகநபர் ஒருவர் செம்புக் கம்பிகளைத் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் மில் வீதியின் ஊடாக வையண்டோட் மேற்கு வீதியில் கிழக்கு நோக்கிச் செல்வது கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் 30 வயதின் நடுப்பகுதியைச் சேர்ந்த, மெலிந்த தேகத்துடன் கூடிய வெள்ளையின நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு மெல்லிய தாடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அவர் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 'ரீபொக்' மேலங்கியையும், அதற்கு உள்ளே இளநிறச் சட்டையையும், காக்கி நிறக் காற்சட்டையையும் அணிந்திருந்தார்.
மேலும், மேற்பகுதியில் இளஞ்சாம்பல் நிறக் கோடு கொண்ட கறுப்பு நிறக் காலணிகளை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், வின்ட்சர் பொலிஸ் சேவையின் 519-255-6700 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.