கனடாவில் 200000 டொலர் பெறுமதியான போதைப் பொருளுடன் 2 பேர் கைது
கனடாவின் தென் ஒன்றாரியோவில் இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஒன்றாரியோவில் சில மாதங்களாக நீடித்த போதைப்பொருள் கடத்தல் விசாரணையின் முடிவாக, இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நொட்டவாசாகா காவல்துறையின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இந்த விசாரணையைத் தொடங்கியது.
இந்த வாரம் புதன்கிழமை மற்றும் வியாழன்கிழமையன்று, பாரி, ஆரஞ்ச்வில், பிராம்டன், செர்சில் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஒருசில வீடுகளில் சோதனை முற்கொள்ளப்பட்டது.
ஒன்றாரியோ காவல்துறையினருடன் பல்வேறு நகர காவல்துறையினரும் இணைந்து கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சோதனைகளில் 2,000 கிராமுக்கும் அதிகமான கொக்கெயின் மற்றும் 100 கிராமுக்கும் அதிகமான பெண்டனில் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் சந்தை மதிப்பு இரண்டு லட்சம் கனடிய டொலர் என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த விசாரணையில், ஆரஞ்ச்வில்லைச் சேர்ந்த 37 வயதான ஆண் மற்றும் பாரியைச் சேர்ந்த 32 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் கொக்கெயின் மற்றும் பெண்டனில் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், அந்த ஆணுக்கு பிணை உத்தரவை மீறிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.