உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது ; ரஷ்ய ஜனாதிபதி புடின்
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புடின் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிரான போரை தா்க்க ரீதியாக, நோ்மையான முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவைப்படும் வலுவும் வழிமுறையும் ரஷ்யாவிடம் உள்ளது. இந்தப் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது’ என்றார்.
மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தப்படும்
இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 72 மணி நேரம் நிறுத்தப்படும் என்று அண்மையில் புடின் அறிவித்துள்ளார்.
அந்தப் போரில் ஜேர்மனியை ரஷ்யா வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக, மே 8 முதல் மே 10-ஆம் தேதி வரை மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைன் தலைநகா் கீவில் நேற்று முன்தினம் (3 ) நள்ளிரவு ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 2 சிறார்கள் உட்பட 11 போ் காயமடைந்ததாக உக்ரைனின் அவசரகால சேவை பிரிவு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.