ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையில் பின்னடைவு ; 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொண்ட ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட் சோதனையில் பகுதியளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தச் சோதனையின்போது, ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மேல்நிலை வெற்றிகரமாக விண்வெளிச் சுற்றுப்பாதையை அடைந்ததுடன், அதனுடன் எடுத்துச் செல்லப்பட்ட 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விடுவித்துள்ளது.

எனினும், விண்கலத்தை விண்ணில் செலுத்திய கீழ்நிலை பூஸ்டர் ராக்கெட்டை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவந்து மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
திரும்பி வந்துகொண்டிருந்த பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவிற்கு மேலே வெடித்துச் சிதறியுள்ளது.
தொழில்நுட்பத் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்வெளிப் பயணச் செலவைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் அமைப்பை உருவாக்கி வருகிறது.
இதற்காக 124 மீற்றர் (407 அடி) உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பாகக் கருதப்படும் இதில், கீழ்நிலை பூஸ்டர் ராக்கெட்டும் மேல்நிலை விண்கலமும் உள்ளடங்குகின்றன.
தெற்கு டெக்சாஸில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை இந்த ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஏவுதலுக்குப் பின்னர், மேல்நிலை விண்கலம் பூஸ்டரிலிருந்து பிரிந்து விண்வெளியை நோக்கிப் பயணித்தது.
இதேவேளை, பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பும் வகையில் அதன் பயணப்பாதை திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், திட்டமிட்டபடி ஏவுதளத்தை நோக்கித் திரும்புவதற்குப் பதிலாக, பூஸ்டர் மெக்சிகோ வளைகுடாவிற்கு மேலுள்ள பகுதியில் வெடித்துச் சிதறியது.
இந்த மீட்பு முயற்சி தோல்வியடைந்ததற்கான துல்லியமான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பிரதிநிதி டான் ஹுவோட், பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்திற்குக் கொண்டுவர முடியாமல் போனதற்கான காரணம் குறித்து உறுதியான விளக்கம் தங்களிடம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மேல்நிலை ஸ்டார்ஷிப் விண்கலம் தனது பயணத்தைத் தொடர்ந்து, அதனுடன் எடுத்துச் செல்லப்பட்ட 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விடுவித்துள்ளது.
விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான இயந்திரக் கரங்கள் மூலம் அதனைப் பிடித்து மீட்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
மேல்நிலை ஸ்டார்ஷிப் விண்கலத்தை இவ்வாறு பிடித்து மீட்பதற்கான முயற்சி இந்தச் சோதனையின் முக்கிய அம்சமாகும்.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பூஸ்டர்களை மீட்பதில் ஸ்பேஸ்எக்ஸ் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
எனினும், முந்தைய சோதனைப் பயணங்களில் மேல்நிலை விண்கலங்களை மீட்பதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெரும்பாலும் ஃபால்கன் (Falcon) ரக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருகிறது.
அவற்றின் முதல் நிலையை மீண்டும் பயன்படுத்த முடிந்தாலும், இரண்டாம் நிலையை மீட்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஸ்டார்ஷிப் திட்டத்தின் மூலம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, ராக்கெட்டின் இரு நிலைகளையும் மீண்டும் பயன்படுத்துவதன் ஊடாக விண்வெளிப் பயணச் செலவைக் குறைப்பதே நிறுவனத்தின் நீண்டகால இலக்காகும்.
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாரத்திற்கு ஒரு முறை ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும் என எலான் மஸ்க் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இதுவரை குறைந்தது 15 பில்லியன் டொலர்களை இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.
இருப்பினும், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய தொழில்நுட்பச் சவால்கள் காரணமாக இந்த இலக்கை அடைவதற்கான கால அட்டவணையில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.