கனடாவில் 13 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சிறார்கள்: வேடிக்கை பார்த்த 30 சிறார்கள்
கனடாவில் மீண்டும் ஒரு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 30 பேர் தாக்குதலை வேடிக்கை பார்க்க, இரண்டு சிறுவர்கள் மட்டும் துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், 13 வயது சிறுமி ஒருத்தி மீது ஐந்து பதின்ம வயதினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை சுமார் 30 பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். சிலர் அந்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இரண்டு சிறார்கள் துணிச்சலாக தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்ததுடன், அவர்களில் ஒருவர் பொலிசாரையும் அழைத்துள்ளார்.
பொலிசார் தாக்குதல் நடத்திய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் வயது வராதவர்கள் என்பதால், முதற்கட்ட விசாரணைக்குப்பின் அவர்களை விடுவித்துள்ளார்கள்.
அத்துடன், துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த இரண்டு சிறார்களையும் பொலிசார் பாராட்டியுள்ளதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், அந்த வீடியோவை யாரும் பகிரவேண்டாம் என்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சமீப காலமாகவே, கனடாவில் என்று மட்டுமில்லை, உலக நாடுகள் பலவற்றில் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது.
கனடாவைப் பொருத்தவரை, 2023ஆம் ஆண்டில் மட்டும் சிறார்கள் தாக்குதல் நடத்திய 41 சம்பவங்கள் பதிவாகியுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.