ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 07 பேர் பலி 150 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று (3) அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
நிலநடுக்கத்தின் மையம் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குல்மிலிருந்து மேற்கு-தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் 28 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்
இந்நிலையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், அதிகாரிகள் பின் அதிர்வுகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய சேதங்களை கண்காணித்து வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை அண்மைய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 6.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்போது, 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் வலுவான பின்அதிர்வுகள் குறைந்தது 4,000 உயிர்களைக் கொன்றதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.