தைவான் கத்திக்குத்து தாக்குதல்களில் 3 போ் உயிரிழப்பு
தைவான் தலைநகா் தைபேயில் இளைஞா் நடத்திய கத்திக்குத்து மற்றும் புகை குண்டு தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்துள்ளதுடன் 11 போ் காயமடைந்தனா்.
இது குறித்து தைவான் தேசிய காவல்துறை இயக்குநா் ஜாங் ஜங்-சின் கூறியதாவது,
சாங் வென் (27) என்ற இளைஞா் கத்திக்குத்து உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டாா். முதலில் சாலைகளில் நின்றிருந்த காா்கள், மோட்டாா்சைக்கிள்களை தீவைத்துக் கொளுத்திய அவா், பின்னா் தைபேவின் முக்கிய மெட்ரோ நிலையத்தின் வெளியேறும் வாயில்களில் புகை குண்டுகளை வீசி, அங்கிருந்த ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றாா்.

அதன்பிறகு அவா் சுரங்கப் பாதை வழியாக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவா் திரும்பினாா். பின்னா் ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே மேலும் புகை குண்டுகளை வீசிய அவா் மேலும் ஒருவரை குத்திக் கொன்றாா்.
அந்தக் கட்டடத்தின் நான்காவது தளத்தில் மற்றொருவரும் சாங் வென்னால் குத்திக்கொல்லப்பட்டாா். பின்னா் ஐந்தாவது தளத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் இருந்து கீழே குதித்து அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்றாா் ஜாங் ஜங்-சின். இந்தத் தாக்குதல்களை சாங் வென் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வன்முறைக் குற்றங்கள் மிகவும் அரிதான தைவானில் இந்தச் சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து பொதுமக்கள் கூடும் இடங்கள், பெரிய நிகழ்ச்சிகளில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாட்டு நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.