மெக்சிகோ கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 158 ஆண்டு சிறை
அமெரிக்கா - மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா பகுதியில் ஆஸ்திரேலிய சகோதரர்கள் இருவர் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கு தலா 158 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில், 33 வயதான காலம் ராபின்சன், 30 வயதான ஜேக் ராபின்சன் ஆகிய ஆஸ்திரேலிய சகோதரர்களும், அவர்களது 30 வயதான அமெரிக்க நண்பர் கார்ட்டர் ரோட் என்பவரும் மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்காகச் சென்றிருந்தனர்.

அங்கு கடற்கரைப் பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தபோது, அவர்களது வாகனங்களில் இருந்த டயர்கள் உள்ளிட்ட உதிரிப்பாகங்களைத் திருட சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற மூவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அருகிலிருந்த கிணறு ஒன்றில் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கு தலா 158 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றொரு நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூவர் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள நீதிமன்றத் தீர்ப்பு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.