கப்பம் கோரிய மூவர், கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மேயின்லேண்ட் பகுதியில் கப்பம் கோரல்களில் ஈடுபட்ட மூவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு விசாரணை குழுவின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த மூவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கப்பம் கோரல்கள் தொடர்பில் 78 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குடியேற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட ஆலோசகர் நினா கிரீகர் (Nina Krieger) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நமது சமூகங்களை மிரட்டி அச்சுறுத்துபவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டுக்குள் வன்முறை மற்றும் கப்பம் கோரல் நடவடிக்கைகளில் ஈடுபட வரும் நபர்கள், சட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாகாண அளவிலான சிறப்பு பணி குழு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடங்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், குறிப்பாக கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நடந்து வரும் விசாரணையின் நம்பகத்தன்மையை காக்கும் நோக்கில், நாடு கடத்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது என எல்லைப் பாதுகாப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.