டொராண்டோ ஹோடட்ல் ஒன்றில் கொள்ளையிட்ட மூவர் கைது
டொராண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதி அதிகாலை 4:30 மணியளவில், பே வீதி மற்றும் அடிலெய்டு வீதி மேற்கு (Adelaide Street West) பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஹோட்டலில் தங்குவதற்காக வரிசையில் காத்திருந்தபோது, அவருக்கு முன்னால் வரிசையில் நின்ற சந்தேக நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

அந்தக்கும்பல் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கி, அவரிடமிருந்த உடைமைகளைப் பறித்துச் சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரிடமிருந்து என்ன திருடப்பட்டது என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொள்ளை மற்றும் உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள்: விட்பி (Whitby) பகுதியைச் சேர்ந்த பிரவீன் ஜெகதீஸ்வரன் (30), கலிடன் (Caledon) பகுதியைச் சேர்ந்த குர்மன் பண்டால் (25), ப்ளூ மவுண்டன் (The Blue Mountains) பகுதியைச் சேர்ந்த ஹர்னீத் திண்ட்சா (25) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது நபராக ஓக்வில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான நதீம் அலி என்பவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர், ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
மேலும், அடையாளம் காணப்படாத ஐந்தாவது நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.