பிரான்ஸ் Paris கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயம்
பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் இருவர் முதுகுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து இல்லை
மூன்றாவது பெண் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர், பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி ஒருவரின் துரித நடவடிக்கையால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்றும், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பற்ற மற்றும் குழப்பமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் Laurent Nuñez கூறியுள்ளார்.
இதுவரை இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படவில்லை என்றும், சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.