அமெரிக்காவில் மக்கள் மீது கார் மோதல் ; 30 பேர் காயம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நபர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி, மக்கள் கூட்டத்துக்குள் மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஈஸ்ட் ஹாலிவுட் பகுதியில் அமைந்துள்ள “தி வர்மாண்டு ஹாலிவுட்” இசை மையத்துக்குச் செல்ல வரிசையாக காத்திருந்தவர்களை, ஓட்டுநர் ஒருவரின் கார் திடீரென மோதியது.
இந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஏழு பேரின் நிலை மிக மோசமாக இருப்பதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குப் பிறகு, மக்கள் கோபமுடன் அந்த வாகன ஓட்டுநரை காரிலிருந்து இழுத்து வெளியேற்றினர். அவர் தாக்கப்பட்டதுடன், ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஓட்டுநர் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸாரின் தொடக்க விசாரணைகளின்படி, வாகனத்தை ஓட்டிய நபர் மதுபோதையில் இருந்திருந்தார் என்பதற்கான பல அடையாளங்கள் உள்ளதாகவும், இதற்கு தீவிரவாதம் அல்லது திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பலர், முழுஉடல் மற்றும் தசைசிதைவு போன்ற காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது மிகவும் வேதனையான சம்பவம் என லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் கூறியுள்ளார்.
" இந்த தருணத்தில், காயமடைந்த அனைவருக்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.