பாவனைக்கு உதவாத 35,000 கிலோ மீன்கள்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் பாவனைக்கு உதவாத தரமற்ற மீன் தொகையுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று களனி குற்ற விசாரணைப்பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சீதுவ மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றி வளைப்புக்களின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து 35,100 கிலோ கிராம் பாவனைக்குதவாத மீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39, 47 மற்றும் 49 வயதுகளையுடைய நீர்கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு , இதன் போது சீதுவ பொலிஸ் பிரிவில் முதுவாடிய பிரதேசத்தில் பாவனைக்குதவாத 5,400 கிலோ மீன் தொகையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் பக்கியாவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பாவனைக்குதவாத 29,700 கிலோ கிராம் மீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
அதோடு , பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.