கனடாவில் போலி ஆவணங்கள் மூலம் கடத்த முயன்ற 392 வாகனங்கள் பறிமுதல்!
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்டு, கடல் வழியே வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற 392 வாகனங்களை கனடிய பொலிஸாரும், கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனமும் மீட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 28 மில்லியன் கனடிய டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கனடாவின் துறைமுகங்கள் வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைக் தடுப்பதற்காக, 'இன்டர்போல் ஒட்டாவா'வின் உதவியுடன் பொலிஸார் ஓராண்டு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது.

பன்னாட்டுச் சர்வதேசக் குற்றக் குழுக்கள், திருடப்பட்ட அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களைப் பயன்படுத்தி வாகனக் கடன்களைப் பெற்று வாகனங்களை வாங்குவதாகவும், பின்னர் அதே ஆவணங்களைக் கொண்டு காப்பீடு எடுத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகைய மோசடி வாகனங்கள் கனடாவிலிருந்து ஏற்றுமதியாவதை விரைவாகக் கண்டறிந்து தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மோசடி மூலம் பெறப்படும் கனடிய வாகனங்களின் கடத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவை இணைந்தே இந்தச் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் கனடாவின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் இருந்து 1,590 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.