கனடாவில் வீட்டு வாடகை மோசடி! பொலிஸார் எச்சரிக்கை
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகா நகரில் இடம்பெற்ற போலி வாடகை வீடு மோசடியில் 8 பேர் மொத்தம் 30,000 டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பீல் பிராந்திய பொலிஸார் இதில் தொடர்புடைய இரு சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், சஸ்காட்செவன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிசிசாகா நகரில் வீடுகள் வாடகைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்.
வாடகைக்கு வீடு தேடிய நபர்கள் அந்த வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அங்குத் தங்களை தற்போதைய வாடகைதாரர்கள் எனப் பொய்யாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பின்னர், இணையவழியில் வாடகை ஒப்பந்தங்களைச் செய்து, வீட்டை உறுதிப்படுத்துவதற்காக 'இ-டிரான்ஸ்ஃபர்' மூலம் முன்பணத்தையும் அனுப்பியுள்ளனர்.
ஆனால், குடியேறுவதற்காக அவர்கள் வீட்டிற்குச் சென்றபோதே, அது போலி விளம்பரம் என்றும், தங்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தெரியவந்துள்ளது. மேலும், தம்மை வீட்டு உரிமையாளர் எனக் கூறிக்கொண்ட நபரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.
பாதிக்கப்பட்ட 8 பேருக்கு இதுவரை தங்குமிடமோ அல்லது அவர்கள் செலுத்திய பணமோ திரும்பக் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள், குறுகிய கால வாடகைச் சேவை இணையத்தளம் வழியாக அந்த வீட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். வீட்டின் உண்மையான உரிமையாளர்களுக்கு இதில் தொடர்பில்லை எனவும், சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதுவும் தற்சமயம் கைவசம் இல்லை எனவும் பொலிஸார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வாடகைக்கு வீடு தேடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பீல் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்களின் அடையாளத்தை எப்போதும் சரியாகச் சரிபார்க்கவும். போதிய முன்னெச்சரிக்கை மற்றும் கள விசாரணைகளை மேற்கொள்ளாமல், அவசரப்பட்டு ஆன்லைனில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ அல்லது பணத்தை முன்பணமாக அனுப்பவோ வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.