கனடாவில் இந்திய வம்சாவளி நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!
மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று இரு மிதிவண்டிப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக 47 வயதான குல்தீப் சிங் கில் என்பவருக்குக் கனடா நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 அன்று வினிபெக்கில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31 வயதான எகோர் போபோவ் மற்றும் அவரது துணைவியாரான 25 வயதான கெர்ரி பொன்னர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அவர்களின் 9 மாத பெண் குழந்தையை அனாதையாக்கியுள்ளது.
சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் கெனாஸ்டன் வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற குல்தீப், பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பாதையில் புகுந்து தம்பதியினர் மீது மோதியுள்ளார்.

மணிக்கு 80 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில் அவர் 131 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.
மோதிய உடனடியாக வாகனத்தைக் கைவிட்டு அவர் தப்பி ஓடியபோதிலும், இரவு 11 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மதுவின் அளவு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
குல்தீப் சிங் கில் ஏற்கனவே 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பியதற்காக அபராதமும் தடையும் விதிக்கப்பட்டவர் என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
சாதாரண தண்டனைகள் இவரைத் திருத்தவில்லை என்பதையே இவரது முந்தைய குற்றப் பதிவுகள் காட்டுகின்றன என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த மாகாண நீதிமன்ற நீதிபதி டேவிட் அயர்லாந்து இச்சம்பவம் துயரத்திற்கும் மேலானது எனக் குறிப்பிட்டு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
போதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக 6.5 ஆண்டுகள் மற்றும் விபத்து இடத்திலிருந்து தப்பிச் சென்றதற்காக 1.8 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை.கனடாவில் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டுவதற்குத் தடை.
இந்தியாவைச் சேர்ந்த நிரந்தரக் குடியுரிமை பெற்ற குல்தீப் சிங் கில், இந்தத் தண்டனைக்குப் பிறகு கனடாவில் இருந்து நாடுகடத்தப்படலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.