சஸ்கட்ச்வானில் மீண்டும் பதற்றம்? துப்பாக்கிதாரி குறித்து எச்சரிக்கை
சஸ்கட்ச்வானில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டு சகோதரர்கள் மேற்கொண்ட கத்தி குத்துத் தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த இரண்டு நபர்களும் குறித்த பகுதி மக்களுக்கு ஆபத்தானவர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கனடாவையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்த நிலையில், மீண்டும் துப்பாக்கிதாரிகள் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சஸ்கட்ச்வானின் மெய்ட்ஸ்டோன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருட்களைக் கொள்ளையிடுவதற்கும் இந்த நபர்கள் முயற்சித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்கு இடமான நபர்களைக் கண்டால் அவர்கள் எதிரில் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவெளியில் இருக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான வாகனங்களைக் கண்டால் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.