கனடாவில் பேருந்தில் சென்ற இந்தியர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கனடாவில் கடுமையான பனிபுயல் உருவாகியுள்ள நிலையில் பாதுகாப்பு என நினைத்து பேருந்தில் பயணித்த இந்தியர் உள்பட 4 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கனடா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடும் குளிர் மற்றும் பனிப்புயல் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உறைபனி சாலையெங்கும் படர்ந்து காணப்படுகிறது.
இதனால், வார இறுதி வரை மக்கள் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வான்கோவர் பகுதியில் இருந்து கெலோவ்னா நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பனி படர்ந்த பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
இதில், இந்திய வம்சாவளியான பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர்.
கனடா அரசு அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை இன்னும் வெளியிடாத நிலையில், சர்ரே நகரில் உள்ள பஞ்சாப் பத்திரிகையில், விபத்தில் சிக்கிய இந்தியர் கரண்ஜோத் சிங் சோதி (வயது 41) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகல் கார்டியன் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குர்பிரீத் எஸ். சகோட்டா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மனைவி, மகன், மகளை பஞ்சாப்பில் உள்ள கிராமத்தில் விட்டு விட்டு, உணவு விடுதி ஒன்றில் சமையல் கலைஞர் பணிக்காக சோதி சென்றுள்ளார்.
பேருந்தில் பயணிப்பது பாதுகாப்பானது என நினைத்து அவர் சென்றுள்ளார் என்று சகோட்டா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கனடா பொலிஸார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தி உள்ளனர்.