கனடாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
மிசிசாகா நகரில் உள்ள எரின் மில்ல்ஸ் டவுன் சென்டர் வர்த்தக நிலையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் சம்பந்தப்பட்ட நான்கு இளவயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பீல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுத்தியல்கள் ஏந்திய முகமூடி அணிந்த நான்கு பேர் மாலுக்குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலின் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி சந்தேகநபர்களைக் கவனித்ததும் உடனடியாக துரத்தினர்.

இதில் ஒருவரை அங்கிருந்தே கைது செய்தனர். மற்ற மூவர் திருடப்பட்ட ஹோண்டா CR-V வாகனத்தில் தப்பிப் போனதாக கூறப்பட்டது.
சில நிமிடங்களில் பொலிஸார் அந்த வாகனத்தை கண்டுபிடித்து துரத்தலைத் தவிர்க்க வாகனத்தை முற்றுகையிட்டனர்.
பொலிஸார் வெளியிட்ட டாஷ்கேம் வீடியோவில், இரண்டு போலீஸ் வாகனங்கள் சந்தேக வாகனத்தை முன்னிலையும் ஓட்டுநர் கதவுபுறமும் மறித்துக் கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
வாகனம் நிறுத்தப்பட்ட சில வினாடிகளில் ஒருவர் ஓடிப்போக முயன்றார்; அதிகாரிகள் துரத்தி பிடிக்க முயன்றனர்.
மற்றொரு சந்தேகநபரும் தப்பிக்க முயன்றபோதும் பொலிஸார் அவர் மீது பாய்ந்து கட்டுப்படுத்தி கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை; மாலில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
14 முதல் 17 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.