சொகுசுக் கப்பலில் பரவிய ஹன்டா வைரஸால் 40 பேருக்கு பாதிப்பு; இருவர் இந்தியர்கள்
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த மாதம் முதலாம் திகதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்கள் இருந்தனர்.

புறப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்த 3 பயணிகள்
அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லான்டிக் பகுதிகளின் தீவுகளுக்கு சொகுசு கப்பல் பயணம் மேற்கொண்டது. புறப்பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் முகாமிட்டிருந்த சொகுசுக் கப்பல் தற்போது நெதர்லாந்தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. எலிகள் மூலம் மனிதர்களுக்கு ஹன்டா வைரஸ் பரவுகின்றது. குறிப்பாக எலிக் கழிவுகள் படிந்த இடங்களைச் சுத்தம் செய்யும்போது மனிதர்களுக்கு வைரஸ் பரவுகின்றது.
மேலும் எலிக் கழிவுகளின் நுண்துகள்கள் காற்றில் கலந்து, அவற்றை சுவாசிப்பதன் மூலமும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. எனினும் இது கொரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்பில்லை என இந்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.