உக்ரைனில் தோண்ட தோண்ட கிடைத்த 440 சடலங்கள்; அதிர்ச்சியில் அதிகாரிகள்!
உக்ரைனில் ஒரே இடத்தில் 440 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
கிழக்கு உக்ரைனிலுள்ள பெரும்பாலான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ரஷ்ய ராணுவம். குறிப்பாக, ரஷ்யாவை ஆதரிக்கும் மக்கள் அதிகம் வாழும் டொனட்ஸ்க் மாகாணத்தைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
தற்போது, அந்த மாகாணத்திலுள்ள இஸியம் என்ற நகரை உக்ரைன் தங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிழக்கு நகரமான இஸியத்தில் 440-க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடத்தை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மிகப்பெரிய சவ புதைக்குழி
இது தொடர்பாக உக்ரைனிய தலைமை காவல் புலனாய்வாளர் செர்ஹி போல்வினோவ் (Serhiy Bolvinov) கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு உடலிலும் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ரஷ்யாவிடமிருந்து விடுவிக்கப்பட்ட (பகுதிகளில்) உள்ள மிகப்பெரிய சவ புதைக்குழிகளில் இதுவும் ஒன்று என்று என்னால் சொல்ல முடியும்.
440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் பீரங்கித் தாக்குதலில் இறந்ததும், சிலர் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததும் தெரியவந்திருக்கிறது.
மேலும் இது தொடர்பான தெளிவான தகவல்கள் விரைவில் கிடைக்கும் என கூறியுள்ளார்.