கனடா பொதுத் தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ் கனடியர்கள்; வெற்றிபெறப்போவது யார்!
கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள்.
புதியவர்களான இருவர் கொன்சவேடிவ் கட்சியின் வேட்பாளர்களாகும். மற்ற ஒருவர் பசுமைக் கட்சியின் வேட்பாளர் Etobicoke வடக்கு தொகுதியில் சருன் பாலரஞ்சன் . ஆறாவது தமிழராக , அமைச்சர் பதவி வகித்தவருமான அனிதா ஆனந்த் தேர்தலை எதிர்கொள்கிறார்.
மேலே சொல்லப்பட்ட இரு புதியவர்கள் வரிசையில் கொன்சவேடிவ் கட்சி வேட்பாளர்களாக லியோனல் லோகநாதன் மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியையும், நிரான் ஜெயநேசன் மார்க்கம் ஸ்ரோவில் தொகுதியையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் இவர்களை கொன்சவேடிவ் கட்சி ஏற்றுக் கொண்டது. இப்போது நிலைமை கவலைக்கிடம். இத்தொகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் கட்சி பேதம் பார்க்காமல், லியோனல், நிரான் இருவருக்கும் வாக்களிப்பார்களேயாயின் இந்த இரு தமிழர்களுக்கும் வெற்றி நிச்சயம்.
தனது வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக வைத்திருக்கும் நிலையில் லிபரல் வேட்பாளராக ஸ்காபரோ கில்வூட் ரூஜ்பார்க் தொகுதியில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் போட்டியிடுகிறார். லிபரல் வேட்பாளராக போட்டியிடும் அடுத்த தமிழர் ஒரு பெண்.
அவர்தான் ஜூனிதா நாதன். ஏற்கனவே கனடிய அரசியலில் ஈடுபட்டு வெற்றியீட்டிய முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமை கொண்டவர். தற்போது வார்ட் 7 தொகுதியின் கவுன்சிலராகவும் பதவியிலிருக்கிறார்.
மார்க்கம் கல்விச் சபையில் முன்பு இருந்தவர். சமூக சேவை அனுபவம் மிகவும் கொண்டவர். அரசியலில் எதிர்கொள்ளப்படும் நுணுக்கங்கள் நன்கு புரிந்த, தெரிந்த தமிழ்ப்பற்றாளர். துணிச்சலான பெண்மணி. பிக்கரிங் ப்ரூக்ளின் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரது வெற்றியானது இன்னுமொரு ஈழத்தமிழ்நிலைப்பட்ட ஆற்றலாளரை கனடியப் பாராளுமன்றம் கொண்டிருக்க வைக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் ஏற்படும்.
ஒருவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர் ஒட்டாவாவில் நம்மை அறிவார்ந்த வகையில் & மரியாதைக்குரியவகையில் பிரதிநிதித்துவப்படுத்துமளவிற்கு ஏற்றவரா என்பதை முதலில் நாம் பார்க்கவேண்டும்.
ஆகவே பொறுப்பான ஈழத் தமிழராக நாம் நம்மை வைத்து, நம்மவர்க்கான வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுய இலாபத்திற்காக கீழறுப்பு வேலைகளை செய்து கொண்டிருப்பவர்களை "For EelamTamil's Sake" இனியாவது நாம் கடுமையாகத் தட்டிக் கேட்கவேண்டும். இல்லையேல், அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாகப் போய்விடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.