நாளுக்கு 5,000 பேர் இறப்பு: சீனா தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாளுக்கு 5,000 பேர்கள் வரையில் மரணமடைவதாக சுகாதார தரவுகளுக்கான நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால் மொத்த மக்கள் தொகையில் 60% பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரித்தானிய நிறுவனம் ஒன்று, திரட்டிய தரவுகளின் அடிப்படையில், நாளுக்கு 5,000 பேர்கள் வரையில் கொரோனாவால் இறப்பதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால், சீனா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் மட்டும் 1,800 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாகவும் 7 பேர்கள் மட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
டிசம்பர் 21ம் திகதி இறப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பாதிப்பு எண்ணிக்கை 2,966 எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக பதிவாவதால் சீன நிர்வாகம் திணறும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானிய நிறுவனம் தெரிவிக்கையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டால் சீனாவில் 1.3 முதல் 2.1 மில்லியன் மக்கள் வரையில் இறக்க வாய்ப்புள்ளது எனவும், இதேபோன்றதொரு கணிப்பை வெளியிட்ட நிறுவனமும் சீனாவில் 2.1 மில்லியன் மக்கள் வரையில் இறக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
அத்துடன், ஜனவரி மத்தியில் நாளுக்கு 3.7 மில்லியன் பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படும் எனவும் மார்ச் மாதங்களில் நாளுக்கு 4.2 மில்லியன் பேர்கள் வரையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்,
தலைநகர் பெய்ஜிங் மற்றும் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.