ஈரானில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஈரானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு ஈரானின் இலாம் (Ilam) மாகாணத்தில் உள்ள ஐவன் (Eyvan) நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 மாதக் குழந்தை ஒன்றும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர், தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் முன்னெடுத்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.