மத்திய கிழக்கு போர் ; எரிவாயு உற்பத்தி அதிகரிக்க அவுஸ்திரேலியாவிடம் ஜப்பான் அவசரக் கோரிக்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிடம் ஜப்பான் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஜப்பானிய தொழில் துறை அமைச்சர் ரியோசி அகசாவா (Ryosei Akazawa), அவுஸ்திரேலிய வளங்கள் துறை அமைச்சர் மெடலின் கிங்குடன் (Madeleine King) நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இயற்கை எரிவாயு உற்பத்தியை முடிந்தவரை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழ்நிலையில், அவுஸ்திரேலியாவின் மலிவான மற்றும் நிலையான எரிவாயு விநியோகம் ஜப்பானின் எரிசக்தி பாதுகாப்பிற்கு உயிர்நாடியாகும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜப்பான் தனது எரிவாயு தேவையில் சுமார் 40 சதவீதத்தை அவுஸ்திரேலியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. அதேவேளை, கத்தார் நாடு தனது எரிவாயு உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதால், உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு தற்போது தடைப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து ஜப்பானுக்கு வரும் 11 சதவீத எரிவாயு விநியோகம் போரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலியா உற்பத்தியை அதிகரிப்பது ஜப்பானுக்கு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.