பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் 6 வயது சிறுவன்; வைரலாகும் காணொளி
பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் 6 வயது சிறுவன் அமர்ந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தானில் உள்ள கப்லு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகம்மது ஷிராஸ். இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார்.
அவரது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமை 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அந்த சிறுவன் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்.
முகம்மது ஷிராஸ் தனது சகோதரி முஸ்கானுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிறுவன் முகம்மது ஷிராசை தனது நாற்காலியில் அமர வைத்த காட்சிகளும் உள்ளது.
சிறுவனுடன் பிரதமர் சிரித்து பேசி உரையாடிய காட்சிகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.