சீனாவின் 6 வயது சிறுமியின் அபார சாதனை ; ரூபிக்ஸ் கியூப் உலக சாதனை முறியடிப்பு
பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் பிரிவில் சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்சி புதிய உலக சாதனை படைத்து கியூபிங் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
உலக கியூப் சங்கம் நடத்திய அதிகாரப்பூர்வ போட்டியில், ஐந்து முறை ரூபிக்ஸ் கியூப்பைத் தீர்த்ததில் பதிவான நேரங்களின் அடிப்படையில், லியான் யுன்சியின் ஒட்டுமொத்த சராசரி நேரம் 4.27 வினாடிகளாகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு நகரைச் சேர்ந்த லியான் யுன்சி, கடந்த ஓராண்டாக ரூபிக்ஸ் கியூப் தீர்க்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
தினமும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை பல்வேறு கியூப் தீர்க்கும் உத்திகளை அவர் பயிற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் போட்டியில் பங்கேற்ற லியான் யுன்சி, 4.52 வினாடிகள் என்ற சராசரி நேரத்தில் கியூப்பைத் தீர்த்து முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14ஆம் திகதி குவாங்சோ நகரில் நடைபெற்ற மற்றொரு போட்டியிலும் அவர் பங்கேற்றார். இதில் 4.27 வினாடிகள் என்ற புதிய சராசரி நேரத்தைப் பதிவு செய்து, தனது சொந்த சாதனையையே மீண்டும் முறியடித்தார்.
இதன் மூலம் ரூபிக்ஸ் கியூப்பை 4.5 வினாடிகளுக்கும் குறைவான சராசரி நேரத்தில் தீர்த்த முதல் பெண் கியூபர் என்ற பெருமையையும் லியான் யுன்சி பெற்றுள்ளார்.

அவரது சாதனைக்கு முக்கிய காரணமாக விரல் வேகம் மட்டுமின்றி, 1,300-க்கும் மேற்பட்ட ரூபிக்ஸ் கியூப் தீர்க்கும் உத்திகளை நினைவில் வைத்திருக்கும் திறனும் குறிப்பிடப்படுகிறது.
லியான் யுன்சிக்கு முன்பாக பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் உலக சாதனை 4.62 வினாடிகளாக இருந்தது. அந்த சாதனை சீனாவின் வாங் ஹாங்மிங் வசம் இருந்த நிலையில், லியான் யுன்சி அதனை முறியடித்து புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார்.
வெறும் 6 வயதிலேயே ரூபிக்ஸ் கியூப் போட்டியில் உலக சாதனை படைத்துள்ள லியான் யுன்சியின் அசாத்திய திறமைக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.