வங்கதேசில் ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, சந்தேகத்தின்பேரில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அப்போதுமுதல் அந்நாட்டில் சிறுபான்மை ஹிந்துக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிவந்த தீபு சந்திர தாஸ் (25) என்பவா் மதநிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அவா் மீது கும்பல் ஒன்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. தொழிற்சாலைக்கு வெளியே அவரைத் தாக்கிய அந்தக் கும்பல், பின்னா் அவரை மரத்தில் கட்டித் தூக்கில் தொங்கவிட்டது.
இதில் உயிரிழந்த அவரின் சடலத்தை டாக்கா-மைமென்சிங் நெடுஞ்சாலையில் அந்தக் கும்பல் தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த இடைக்கால அரசு, தீபுவை கொன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இடைக்கால அரசு ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தீபு சந்திர தாஸ் கொலை தொடா்பாக சந்தேகத்தின்பேரில் 7 பேரை அதிவிரைவுப் படை கைது செய்துள்ளது.
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 19 முதல் 45 வயது கொண்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.