கனடாவில் அதிர்ச்சி: திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பணியாற்ற வேண்டிய பொலிஸ் துறையிலேயே திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஈடுபட்டுள்ளமை கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோ பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
யோர்க் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்த நீண்டகால ரகசிய விசாரணையின் பின்னணியில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் இந்த சம்பவம், பொலிஸ் அமைப்பின் நம்பகத்தன்மையை கடுமையாக கேள்விக்குறியாக்கியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் உடனடியாக சம்பளமின்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் டொராண்டோ பொலிஸின் 11 மற்றும் 12 பிரிவுகள் மற்றும் துப்பாக்கி மற்றும் வன்முறைக் கும்பல் போன்ற முக்கியப் பிரிவுகளில் பணியாற்றியவர்கள் என்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் உத்தியோகத்தர்களில் இருவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
டிம் பார்ன்ஹார்ட் (12வது பிரிவு) மற்றும் ராப் பிளாக் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை குலைக்கும் இந்த சம்பவம், கனடாவில் பொலிஸ் துறையின் உள்ளக கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.