கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் 70 அடி சிலை அகற்றம்
உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை நேற்று மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் இருந்து , அகற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்றின்போது, இரும்பு மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு செய்யப்பட்ட இந்த மாபெரும் சிலை பலமாக ஆடியுள்ளது. இதனால், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை விஐபி சாலை பகுதியில் உள்ள சுரங்கப்பாதை பாதசாரி நடைபாதை மேலே அமைக்கப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட சிலையை, ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவின் உதவியுடன் பாதுகாப்பாகப் பிரித்து அகற்றினர்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி, 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை ஏந்தி நிற்பது போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2025 டிசம்பரில் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின்போது இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அப்பயணத்தின் போது மைதானத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.