அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் மூலம் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை ஈரான் தளர்த்தியது. ஈரான் எண்ணெய் வளங்கள் மீதான தடையையும் அமெரிக்கா ரத்து செய்தது.
எனினும் ஈரான் சில கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு அமெரிக்கா உடன்பட்டால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
பேச்சுவார்த்தையை சுமூகமாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் வாஷிங்டன் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
லெபனான், காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனை நிறுத்தும் வரை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.