புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி: ஊசி மூலம் கட்டிகளைக் கரைக்கும் புதிய மருந்து!
தோலின் கீழ் போடும் ஒரு எளிய ஊசி மருந்து மூலம் புற்றுநோய் கட்டிகளைப் பெருமளவில் சுருக்க முடியும் எனப் புதிய மருத்துவ ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் வரக்கூடிய அல்லது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவக்கூடிய தலை மற்றும் கழுத்து பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை வெற்றியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச்' (ICR) விஞ்ஞானிகள் மேற்கொண்ட 'OrigAMI-4' என்ற இந்த மருத்துவ பரிசோதனையின் முடிவுகள், நடைபெற்ற அமெரிக்க மருத்துவப் புற்றுநோயியல் சங்கத்தின் (ASCO) வருடாந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

வழக்கமான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகள் பலனளிக்காமல் போன நோயாளிகளுக்கு 'அமிவாண்டாமாப்' என்ற இந்த புதிய ஊசி மருந்து செலுத்தப்பட்டது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 102 நோயாளிகளில், 43 பேருக்குப் புற்றுநோய் கட்டிகள் கணிசமாகச் சுருங்கியுள்ளன.
இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக 15 பேருக்குக் கட்டிகள் முற்றிலும் மறைந்துவிட்டன. 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும் பரவுவதற்கும் உதவும் சிக்னல்களைத் தடுத்து நிறுத்துகிறது.
இது ஏற்கனவே சில வகையான நுரையீரல் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாகப் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நீண்ட நேரம் குளுக்கோஸ் ட்ரிப் மூலம் மருந்து செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், இந்த 'அமிவாண்டாமாப்' மருந்து தோலின் கீழ் போடும் சிறிய ஊசியாகும். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த ஊசி செலுத்தப்பட வேண்டும் என்பதால் நோயாளிகளுக்கு மிகவும் வசதியானது.
இந்த சிகிச்சையின் பக்கவிளைவுகள் மிகவும் குறைவு. 10ல் ஒரு நோயாளி மட்டுமே பக்கவிளைவுகள் காரணமாகச் சிகிச்சையை நிறுத்தினர். ஏனையவர்களுக்கு லேசான பாதிப்புகளே இருந்தன. "கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபிக்குக் கட்டுப்படாத, மிகக் குறைந்த சிகிச்சை வாய்ப்புகளே உள்ள நோயாளிகளிடம் இந்த மருந்து வெற்றியைப் பெற்றுள்ளது என உயிரியல் புற்றுநோய் சிகிச்சை பேராசிரியர் கெவின் ஹாரிங்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்த 56 வயதான கார்ல் வால்ஷ் என்ற நாக்கு புற்றுநோய் நோயாளி கூறுகையில், "எனக்கு கீமோதெரபி பலனளிக்காத நிலையில் இந்த புதிய பரிசோதனை சிகிச்சையில் சேர்ந்தேன். தற்போது 17வது சுழற்சி சிகிச்சையில் உள்ளேன். கீமோதெரபியில் ஏற்பட்ட மோசமான பக்கவிளைவுகள் இதில் இல்லை. வலியும் வீக்கமும் குறைந்து இப்போது நான் சாதாரண மனிதனைப் போல வாழ முடிகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
HPV கிருமியால் ஏற்படாத தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். இந்த மருந்து குறிப்பாக அத்தகைய கடினமான புற்றுநோய் வகைக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது. உலகளவில் மிகவும் பொதுவான 6வது புற்றுநோய் வகையாக இந்த தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளது.