77 வயது நபரின் உழைப்பால் உருவான குட்டி ஈஃபிள் டவர் ; வியப்பில் மக்கள்
உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸின் 330 மீட்டர் உயரம் கொண்ட ஈஃபிள் டவரை அச்சு அசலாக 31 மீட்டர் உயரத்திற்கு கட்டி முடித்துள்ளார்.
பிரான்ஸின் அல்சேஸ் பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஜீன்-குளோட் ஃபாஸ்லர். பிரான்ஸின் அல்சேஸ் பகுதியைச் சேர்ந்த ஜீன்-குளோட் ஃபாஸ்லர் (77), உலோகப் பணியாளராக 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் ஓய்வு பெற்ற இவர், ஈஃபிள் டவரைக் கட்டுவதைக் கனவாகக் கொண்டுள்ளார். இவருக்கு உதவியாக அவரது பேரனும் இருந்துள்ளார்.
எட்டு ஆண்டுகள்
ஈஃபிள் டவரின் நகலை 8.5 டன் இரும்பு கொண்டு சிவப்பு நிறத்தில் வடிவமைத்து, தனது லட்சியத்தை நிறைவேற்றியதுடன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஈஃபிள் டவர் நகலின் இறுதிப் பணியான உச்சி கோபுரம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஃபாஸ்லர், “பல கட்டுமானங்களுக்கு நான் தலைமை தாங்கியுள்ளேன். ஆனால், இது மிகவும் கடினமாக இருந்தது. என் பேரனின் உதவியுடன் இதனைக் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகளானது. இதில் அனைத்துப் பகுதிகளையும் நாங்களே தயார் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த 31 மீட்டர் உயரம் கொண்ட ஈஃபிள் டவரைப் பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், உண்மையான ஈஃபிள் டவரின் மேல் செல்வதுபோல், இதில் மேலே செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.