84 ஆண்டுகளாக கடிதம் மூலம் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் இணைத்த நட்பு!
பிரித்தானியர் ஒருவர் 84 ஆண்டுகளாக கடிதம் மூலம் மட்டுமே பேசி பழகி வந்த நிலையில் முதல் முறையாக வீடியோ கால் மூலம் பேசிய நிகழ்வு குறித்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
அட்லான்டிக் கடலை கடந்து இரண்டு நூற்றாண்டு காலமாக கடிதத்தால் மட்டுமே உணர்வுகளையும், நிகழ்வுகளையும் பரிமாற்றிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட 100வது வயதை நெருங்கும் வேளையில் முதல் முறையாக வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார்கள்.
பிரித்தானியாவில் டெவோனில் உள்ள ஹோனிடனைச் சேர்ந்த ஜெஃப் பேங்க்ஸ் என்பவரும், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள செலெஸ்டா பைரன் என்ற பெண்ணும் அவர்களது 20வது வயதில் இருந்தே கடிதத்தின் மூலம் நட்பாக பழகி வந்திருக்கிறார்கள்.
முதலில் கல்வி தொடர்பான வேலையின் போது 1938ம் ஆண்டுதான் செலெஸ்டாவிடம் ஜெஃப் தன்னுடைய முகவரியை கொடுத்திருக்கிறார். அது முதலே இருவரும் தங்களுடைய எண்ணங்கள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கடிதத்தில் பேசி வந்திருக்கிறார்கள். ஜெஃப், செலெஸ்டா இருவரது வாழ்க்கையிலும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் வந்த போது கடிதம் எழுதுவதை ஒருபோதும் நிறுத்தாமல் தொடர்ந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், 2002ம் ஆண்டு ஜெஃப் பேங்க்ஸ் நியூ யார்க் வந்திருந்தபோது செலெஸ்டாவை முதல் முறையாக நேரில் பார்த்திருக்கிறார்கள். ஒருவழியாக கைப்பட கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயிலுக்கு மாறியிருக்கிறது. தற்போது ஜெஃப்-ம் செலெஸ்டாவும் தங்களது குழந்தைகளின் உதவியுடன் வீடியோ கால் மூலமும், சாட்டிங் மூலமும் தங்களது நட்பை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து பேசியுள்ள ஜெஃப், “கடிதம் எழுதி பழகி வந்ததும் பெரிய ஆத்ம திருப்தியாகவே இத்தனை காலமும் இருந்தது. செலெஸ்டா ரொம்பவே சுவாரஸ்யமானவர். நாங்கள் இருவரும் பல கதைகளை பகிர்ந்திருக்கிறோன்.” என்று கூறியிருக்கிறார். அவர்கள் இருவரும் கடிதம் எழுதத் தொடங்கியதற்கும் இப்போதைக்கு இருக்கும் உலகத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கவேச் செய்திருக்கிறது.
இருவருமே இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் 1938ம் ஆண்டில்தான் முதல் முதலில் கடிதப் பரிமாற்றத்தை தொடங்கியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளே இருந்தன.
செலெஸ்டா இருக்கும் டெக்சாஸில் மோசமான வறட்சியும், உலகப் போர் காரணமாக ஜெஃப் இருக்கும் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைகான சமாதான நடவடிக்கைகளும் இருந்ததால் இரு நாட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாகவே இருந்தது. இப்படியான பற்பல பிரச்னைகளை சமாளித்துக் கொண்டே ஜெஃப் - செலெஸ்டா இருவரும் தங்களது நட்பையும் வளர்த்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் ஆணும் பெண்ணும் பேசினால் காதலாகத்தான் இருக்கும் என்ற அதே பொது புத்தி ஜெஃப், செலெஸ்டாவையும் விட்டு வைக்கவில்லை.
ஆனால், “மற்றவர்களை போல நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் மட்டுமே. பக்கத்து விட்டைச் சேர்ந்தவரோடு எப்படி பழகுவோமோ அப்படிதான் நானும் ஜெஃப்-ம்.” எனக் கூறி செலெஸ்டா இதற்கு அப்போதே பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.