ஹிட்லரின் புத்தகத்தினால் பதவி இழந்த கனடிய அதிகாரி
சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் கையெழுத்திட்ட அரசியல் அறிக்கையான 'மெயின் காம்ப்' (Mein Kampf) புத்தகத்தை வைத்திருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கனடாவின் நயாகரா மாநகரசபைப் பிராந்தியத் தலைவர் பாப் கேல் (Bob Gale), தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நயாகரா பிராந்திய நிறவெறி எதிர்ப்புச் சங்கம் மற்றும் 'ஜஸ்டிஸ் 4 பிளாக் லைவ்ஸ்' (Justice 4 Black Lives) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ஹிட்லரால் கையொப்பமிடப்பட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் அந்தப் புத்தகத்தை பாப் கேல் விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டின.
யூத எதிர்ப்பு மற்றும் வெறுப்புணர்வின் அடையாளமான ஒரு புத்தகத்தை மிகவும் சிரமப்பட்டு வாங்கி, அதை ஹிட்லரின் கையெழுத்து தானா என்று உறுதிப்படுத்தி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதற்காக பாப் கேல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்புகள் வலியுறுத்தின.
தனது ராஜினாமா கடிதத்தில் மன்னிப்பு எதையும் கேட்காத பாப் கேல், தான் ஒரு தீவிரமான வரலாற்று ஆய்வாளர் (Historian) என்றும், தன்னிடம் பல அரிய வரலாற்று ஆவணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தந்தை ஜார்ஜ் வாஷிங்டனின் கடிதம், அடிமைமுறை எதிர்ப்புப் போராளி ஜான் பிரவுனின் 1859-ஆம் ஆண்டுக் கடிதம், வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் வத்திக்கான் ஆவணங்கள், 1685-ல் நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் என்பனவற்றை பாப் கேல் சேகரித்து வைத்துள்ளார்.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எனது பெயரைக் குறிப்பிட்டுப் பரப்பிய ஆவணமே இந்த சர்ச்சைக்குக் காரணம். நயாகராவில் மாற்றத்தை விரும்பாத ஒரு சிறு குழுவினர், எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனவேதனையை உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என பாப் கேல் குற்றம் சாட்டியுள்ளார்.