கனடாவில் சட்டவிரோத சூதாட்ட மையங்கள் சுற்றி வளைப்பு:9பேர் கைது
கனடாவின் வான் (Vaughan) மற்றும் டொரோண்டோ நகரங்களில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கேமிங் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யார்க் பிராந்திய காவல் துறை (York Regional Police), South Simcoe காவல் துறையுடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘Project Scala’ என்ற பெயரில் இந்த விசாரணையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் மூலம், சட்டவிரோத சூதாட்ட மையங்களில் இருந்து பணம் வசூலித்து வந்ததாகக் குற்றம் சாட்டப்படும் குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 22 அன்று, வான் மற்றும் டொரோண்டோ நகரங்களில் உள்ள மூன்று வீடுகள் மற்றும் மூன்று கேமிங் மையங்கள் மீது தேடுதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனுடன், டொரோண்டோவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஒரு சேமிப்பு லாக்கர் மற்றும் இரண்டு வாகனங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, வீடியோ கேமிங் இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள், சட்டவிரோத புகையிலை மற்றும் மதுபானங்கள்,கிரிப்டோ வாலெட், பெருமளவு ரொக்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் நாணயங்கள், இரண்டு வாகனங்கள் மற்றும் குறிப்பிடப்படாத அளவிலான கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், கேம்பிரிட்ஜ், இனிஸ்ஃபில், டொரோண்டோ, டாட்டன்ஹாம் மற்றும் வான் உள்ளிட்ட தெற்கு ஒன்டாரியோ நகரங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலெசாண்ட்ரோ ஒர்டோலானோ (56), ஜியோர்ஜியோ கம்பான்யா (64), ஜியூசெப்பே மினாசி (61), ஜியூசெப்பே பெராரோ (63), கேப்ரிஸ் ஸ்லூமன் (61), சால்வடோர் பிளாண்டா (50), பால் லெசிஸ் (47), காஸ்பெரே மால்ஃபாரா (70) மற்றும் ஜேம்ஸ் ஸீ (27) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது மொத்தமாக 22 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.